சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 14 வீரர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல்கள் நம்மை அதிரவைக்கின்றன. மாவோயிஸ்ட்களை எதிர்கொள்வதற்கு உயிரையே பணயம் வைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களை அரசு எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பது வேதனையளிப்பதாக உள்ளது.
மாவோயிஸ்ட்களின் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுவது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இருக்கும் ஆயுத பலம், ஆள் பலம், தகவல் தொடர்பு வசதி, மருத்துவ வசதி ஏதும் இல்லாமல், காட்டில் மறைந்து திரிந்துதான் செயல்படுகின்றன அந்த இயக்கங்கள். அவர்கள் அனைவரையும் அப்படியே பிடித்துச் சிறையில் அடைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர்களால் கொல்லப்படாமலாவது தற்காத்துக்கொள்ளலாம் அல்லவா?
திங்கள்கிழமை பட்டப்பகல் 10.30 மணிக்கு ரோந்து சென்ற சி.ஆர்.பி.எஃப். போலீஸார் மாவோயிஸ்ட்களால் சுற்றிவளைத்துத் தாக்கப்பட்டபோது, அவர்களால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு உதவியாக வேறு படைப்பிரிவுகளாலும் அங்கே விரைந்து செல்ல முடியவில்லை. தாக்கியவர்கள் அந்த இடத்திலேயே 13 பேரைக் கொன்றதுடன் அவர்களிடமிருந்து 10 ஏ.கே. 47 ரக தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கருவிகளையும் பறித்துச் சென்றுவிட்டார்கள்.
மோதல் நடந்த உடனேயே காயம்பட்டவர்களை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றிருந்தால் சிகிச்சை அளித்துச் சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவசரத்துக்குப் பாதுகாப்பாக ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல அந்தக் காட்டில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. காட்டில் மாவோயிஸ்ட்கள் எந்தப் பக்கமிருந்தும் வந்து தாக்கக்கூடும் என்பதால், இந்திய விமானப்படை தனது ஹெலிகாப்டரை அவசர உதவிக்கு அனுப்ப மறுத்திருக்கிறது. ‘நாட்டை மாவோயிஸ்ட்களிடமிருந்து காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு, உங்களைக் காப்பாற்றுவது எங்கள் பொறுப்பல்ல’ என்று அரசு, மத்திய ரிசர்வ் போலீஸுக்கு உணர்த்துகிறதோ?
மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமின் நிலைமையைக் கேட்டால், மாவோயிஸ்ட்கள் வேண்டாம், மத்திய அரசின் அலட்சியமே அவர்களைக் கொன்றுவிடும் என்பது புரிகிறது. 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதியையே தொடர்ந்து 15 நாட்களாக ரோந்து சுற்றி வந்த அவர்கள், தங்கள் உடல் நிலையைக் கவனித்துக்கொள்வதற்காக விடுமுறை பெற்று ஊருக்குப் போகவே விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், முகாமில் 150 பேருக்கு 5 கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. நல்ல காய்கறிகளும் உணவும் தரப்படுவதில்லை. அங்கு சமைக்கப்படும் உணவு பலருக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. முகாமில் நல்ல குடிநீர், தரமான உணவு, மருத்துவ வசதிகள் செய்துதரப்படாதது வியப்பளிக்கிறது. அவர்களில் பலர் கொசுக்கடியால், மலேரியாவுக்கும் கடுமையான தோல் வியாதிகளுக்கும் ஆளாகியிருந்தனர். அதைக் கவனிக்கக்கூட ஆட்சியாளர்களால் முடியவில்லை. ‘இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்’என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட மாவோயிஸ்ட்களை எந்த லட்சணத்தில் அரசு எதிர்கொள்கிறது பாருங்கள்!
நம்முடைய முதல் எதிரி மாவோயிஸ்ட் இயக்கம் அல்ல, நமது அலட்சியம்தான். அலட்சியத்தை வெல்லாமல் மாவோயிஸ்ட்களை வெல்வது சாத்தியமே இல்லை.
ஏதே மாதிரி எல்லா துறைகளிலும் இருக்கின்றன. மக்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்
No comments:
Post a Comment